×

கடவூர் ஒன்றிய பகுதிகளில் பொது இடத்தில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிய 2 கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்-ஒன்றிய ஆணையர் அதிரடி

தோகைமலை : கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றிய பகுதிகளில் 50க்கும் அதிகமான கோழி இறைச்சி கடைகள் உள்ளது. இந்த கடைகளில் முக்கிய பண்டிகைகள், வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுகிழமை மற்றும் தினசரி என்று பொதுமக்கள் கோழி இறைச்சிகளை பெறுகின்றனர்.இந்நிலையில் பொது இடங்களான கழிவு நீர் வடிகால், பேருந்து நிறுத்தம் அருகே, மக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள், கோவில்கள், குழந்தைகள் மையங்கள், அலுவலகங்கள் என்று பல்வேறு பகுதிகளின் அருகே கோழி இறைச்சிகளின் கழிவுகளை வீசிச்செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கடவூர் ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் நேற்று தரகம்பட்டி பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளை ஆய்வு செய்தார்.அப்போது கோழி இறைச்சி கடைகள் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கோழி இறைச்சி கழிவுகளை பொது இடத்தில் கொட்டி வைத்திருப்பதை கண்டறிந்தார். இதனால் தரகம்பட்டி பகுதியில் உள்ள 2 கோழி இறைச்சி கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். பின்னர் கோழி இறைச்சி கழிவுகளை ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு உள்ள குப்பை கிடங்கு அருகே குழி அமைக்கப்பட்டு அதில் இறைச்சி கழிவுகளை கொட்ட வேண்டும். தொடர்ந்து குழியில் கொட்டிய இறைச்சி கழிவுகளை வெளியில் தெரியாதவாறு மண்ணால் மூடி வைக்க வேண்டும் என்று இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கோழி மற்றும் இதர இறைச்சி கடைகளை சேர்ந்த நபர்கள் நடந்து கொண்டால் அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதேபோல் கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள கடவூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், ஆதனூர், செம்பியநத்தம், தேவர்மலை, மேலப்பகுதி, கீழப்பகுதி, வாழ்வார்மங்களம், கீரனூர், வெள்ளப்பட்டி, வடிவம்பாடி, பாப்பையம்பாடி, பண்ணப்பட்டி, காளயபட்டி, வரவணை, தென்னிலை, தரகம்பட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி ஆகிய 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இறைச்சி கடைகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கடவூர் ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வின் போது தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி, ஊராட்சி மன்ற செயலாளர் சஞ்சய்காந்தி ஆகியோர் உடனிருந்தனர்….

The post கடவூர் ஒன்றிய பகுதிகளில் பொது இடத்தில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிய 2 கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்-ஒன்றிய ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kadavur Union ,Dokhaimalai ,Karur District ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...